இந்தியா எதனால் இன்னமும் முழுமையாக வளர்ந்த நாடாக முடியாமல் இருக்கிறது? இந்தக்கேள்விக்கு பதில் தெரிய வேண்டுமா? இந்திய நண்டுகளைப் பற்றிய குட்டிக்கதை ஒன்று தெரிந்தாலே போதும் என்பார்கள்! அதென்ன இந்திய நண்டுகள்? கடல் நண்டுகளை விற்பனை செய்யும் ஒரு கடையில் பல நாட்டுக் கடற்புறங்களிலிருந்தும் பிடிக்கப்பட்ட நண்டுகளை கண்ணாடிக் குடுவையில் அடைத்துப் பார்வைக்கு வைத்திருந்தார்கள். மற்றெல்லாக் குடுவைகளும் மூடப்பட்டிருந்த நிலையில் ஒரே ஒரு கண்ணாடிக் குடுவை மட்டும் மூடப்படாமல் திறந்தே இருந்ததாம்! ஏன் அப்படி? அதிலிருக்கும் நண்டுகள் வெளியேறித் தப்பிவிடாதா? இப்படிக் கேட்கப்பட்ட போது கடைக்காரர் சொன்னாராம்! அவை இந்திய நண்டுகள்! ஏதோ ஒரு நண்டு மேலேறித் தப்ப முயன்றால் மற்ற நண்டுகள் அதன் காலைப்பிடித்து இழுத்துக் கீழே தள்ளிவிடும்! அதனால் கவலை இல்லை என்றாராம்.
சவுத் சீனா மார்னிங் போஸ்ட்! இது சீனாவின் அலிபாபா குழுமம் நடத்தும் ஆங்கில நாளிதழ். இன்றைக்கு இப்படி ஒரு படம்போட்டு மோடி தன்னை ஷி ஜின்பிங் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் போராட்டங்கள் இந்தியா சீனா அல்ல என்று காட்டுகின்றன என்ற தலைப்பிட்டு ஒரு செய்திப்புரட்டை வெளியிட்டிருக்கிறது. எழுதியது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஒரு வங்காளி தேபசிஷ் ராய் சவுத்ரி! கொஞ்சம் வேடிக்கையான செய்திக்கட்டுரை என்று இங்கே மூன்று நாட்களுக்கு முன் எழுதியிருந்ததை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தபோது இந்தியநண்டுகள் பற்றிய கிண்டலான கதை தான் நினைவுக்கு வந்தது.
டொனால்ட் ட்ரம்ப் பேசும் போது சொலைமானி நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களில் 2012 இல் புது டில்லியில் இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் மீது நடத்தப்பட்டதைக் குறிப்பிட்டுச் சொன்னது தற்செயலானது அல்ல. நாட்டின் பாராளுமன்றத்தின் மீதே தாக்குதல் நடத்திய போது கூட அமைதிகாத்த காங்கிரஸ் ஆட்சியாளர்கள் அன்றைக்கு இஸ்ரேலிய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மட்டும் என்ன செய்திருப்பார்கள்? சந்தேகம், குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக சொந்த நாட்டு ராணுவத்தின் மீதே ஆட்சிக்கவிழ்ப்பு புகாரை சொன்னவர்கள் காங்கிரஸ் காரர்கள் என்பதை ஏற்கெனெவே இந்தப்பக்கங்களில் ஒரு தொலைகாட்சி விவாதத்தைத் தொட்டுப் பேசி இருக்கிறோம்.
சேகர் குப்தா இந்த 15 நிமிட வீடியோவில், சொலைமானி கொல்லப்பட்டபிறகு அமெரிக்கா உலக நாடுகள் பலவற்றுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதான பட்டியலில் பாகிஸ்தான் இருந்தது ஆனால் இந்தியா இல்லையே ஏன் என்ற கேள்வியை எடுத்துக் கொண்டு சில அனுமானங்களைச் சொல்கிறார். முக்கியமாக பாகிஸ்தான் இருக்கிற (பூகோள) கேந்திர முக்கியத்துவம் பற்றிச் சொல்கிறார். ஆப்கானிஸ்தான், ஈரான் இருநாடுகளுடனும் எல்லையைப் பகிர்ந்துகொள்கிற நாடாக பாகிஸ்தான் மட்டுமே இருக்கிறது, இந்தியா அல்ல. தவிர ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தும் தாலிபான்களில் பாகிஸ்தான் ராணுவத்தால் பயிற்சி கொடுக்கப் பட்டவர்கள் ஒரு பகுதி என்றால் ஈரானில் இருக்கிற தாலிபான்கள் மீதி. இப்படியான கேந்திர முக்கியத்துவம் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டுதான் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இந்தியாவுக்கு எந்தப் பங்கும் இருக்கக்கூடாதென்று அடம்பிடிக்கிறது. CPEC என்று சீனாவின் மத்தியப்பகுதியை பாகிஸ்தானின் குவடார் துறைமுகத்துடன் இணைக்கிற ப்ராஜெக்ட் எந்த முன்னேற்றமுமில்லாமல் இருந்தாலும் (பாகிஸ்தானிடம் காசு இல்லை) சீனாவுக்கும் இந்தியா, இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் ஒரு போட்டி நாடாக வளர்ந்துவிடக் கூடாதென்ற நல்லெண்ணம் நிறையவே இருக்கிறது.
இந்திய நண்டுகள் என்று இன்றைய context இல் யாரைச் சொல்வது? சில வாரங்களுக்கு முன்னால் பிரதமர் சீனா உள்ளிட்ட சில நாடுகளுடன் RCEP என்று பிராந்திய அளவிலான பொருளாதாரக் கூட்டுறவுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துத் திரும்பிய நிகழ்வு நினைவிருக்கிறதா? அதற்கான காரணங்கள் என்னவென்று நினைவிருக்கிறதா?
இன்னமும் அரசின் சலுகைகளிலேயே திளைத்துக் கொண்டிருக்கும் இந்தியத் தொழில் துறை, போட்டியை சமாளிக்க முடியாமல் தடுமாறும் விவசாயத்துறை, உலகமெங்கும் கணினித்துறையில் ஊழியர்களாக மட்டுமே இருக்க முடிகிற தன்னம்பிக்கை, தொழில் முனைப்பு இல்லாத இளைஞர்கள், தொழில்வளர்ச்சியை விடக் கொழுத்து வளரும் ஒட்டுண்ணிகளாக தொழிற் சங்கங்கள், இடதுசாரிகள் என்று தேசம் முன்னேற விடாமல் காலைப்பிடித்து இழுக்கிற நண்டுகளாக இருப்பதைப் பார்க்க முடிகிறதா?
அப்புறம் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் தளத்தில் காசுக்காக ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவனே தேசத்தைச் சிறுமைப்படுத்துகிற மாதிரி ஏன் எழுத மாட்டான்?
மீண்டும் சந்திப்போம்.
யூதர்கள் குறித்து யாராவது எங்கேயாவது உட்கார்ந்து கொண்டு இப்படி எழுதினால் அவர்கள் சில மாதங்களில் காணாமல் போய்விடுவார்கள். அதனால் அவர்களைப் பற்றி பேச எழுத பயப்படுகின்றார்கள்.
ReplyDeleteவாருங்கள் ஜோதிஜி!
Deleteஇங்கே பேசவந்தது எதிர்த்து எழுதுகிறவர்களைப்பற்றி அல்ல. செய்திகளில் டாட்டாநானோ கார் உற்பத்தி / விற்பனை இரண்டுமே ஜீரோ என்று. தொழிற்சாலைவருவதற்காக அரசு இலவசமாக நிலம் தரவேண்டும் , வரிவிலக்கு இன்னபிற சலுகைகள் வேண்டும் என்று வாங்கிக்கொண்டவர்கள் , இப்போது அவைகளைத் திருப்பித்தருவார்களா? அரசின் சலுகைகளில் அல்லது வரி ஏய்ப்பதில் மட்டுமே இந்தியத் தொழில்துறை ஜீவித்துக் கொண்டிருக்கிறது. உலகச்சந்தையில் போட்டியை எதிர்கொள்ள முடியாதவர்களை இன்னும் எத்தனை நாட்களுக்கு சீராட்டி மடியில் வைத்துக் கொஞ்சவேண்டும்?அதேபோல பணியாளர்களும். தொழிற்சங்கம் முதற்கொண்டு நிறையவிஷயங்கள் இவர்களை ஒன்றுக்கும் உதவாதவர்களாக, சுயமாகத் தொழில்செய்யத் துப்பில்லாதவர்களாக ஆக்கிவைத்திருக்கின்றன.
சீனாவுடன் போட்டிபோடவேண்டுமென்றால், இவர்கள் பெண்டு நிமிர்த்தாமல் முடியுமா என்கிற யோசனை.
காங்கு வில் உள்ள முதலைகளைப் பற்றி முதலில் வெளிப்படையாக பாஜக அரசு மக்கள் மத்தியில் கொண்டு வர வேண்டும். இதுவரை வழங்கப்பட்ட பெரிய நிறுவனங்களின் கடன் தொகை மற்றும் என்ன காரணத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறித்தும் வெளியே கொண்டு வர வேண்டும். இரண்டு நடந்தால் நல்லது.
Deleteஜோதிஜி! பழைய தலைமுறை தொழிலதிபர்கள் ஒரு சிலரைத் தவிர்த்து இன்றைய கார்பரேட் முதலாளிமார் அனேகமாக அரசியல்கட்சிகள், ஆட்சிகளைத் தங்கள் ஆதாயத்துக்காக வளைப்பவர்களே!
Deleteநான் மனிதராக மதிக்கும் ஒரே நபர் அசிம் பிரேம்ஜி மட்டுமே. 52 000 கோடியை மொத்தமாக மக்களுக்கு கொடுத்து விட்டார்.
Delete