Saturday, January 4, 2020

எண்ணெய் அரசியலும் அமெரிக்க அரசியலும்!

டொனால்ட் ட்ரம்ப்பைப் பற்றி இந்தப்பக்கங்களில் பேசுகிற போது வெறும் கோமாளியாகவே சித்தரிக்கப் படுவதாக நண்பர்கள் யாரேனும் நினைத்தால், அப்படி இல்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். ஜிம்மி கார்ட்டர் ஆக இருக்கட்டும்,  ஜார்ஜ் W புஷ் ஆக இருக்கட்டும், அமெரிக்க அதிபர்களுக்கு, மத்திய கிழக்கு நாடுகளின் உள்ளரசியலில் தலையிடுவதென்பது வெறும் பொழுதுபோக்காக இருந்ததில்லை. அங்கே உள்ள எண்ணெய் வளத்தை தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவருவதான ஆதிக்க அரசியல், சுயநலம் பிரதானமாக இன்றும் கூட இருந்து வருகிறது என்பதை மனதில் தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டுகிறேன். எண்ணெய் அரசியலை அமெரிக்கா தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள ஆரம்பித்தது இரண்டாவது உலகப் போரின் முடிவில் தான் என்பதில் ரஷ்யாவின் ஆதிக்கமும் அதே அளவுக்கு இல்லாவிட்டாலும், கணிசமாக அதே காலகட்டத்திலிருந்து இருக்கிறது.



சீனா எண்ணெய் ஆதிக்க அரசியலில் இன்றுவரை நேரடியாக இறங்கவில்லை என்றாலும் தங்களுடைய எண்ணெய்த் தேவைகளை சிக்கல் எதுவுமில்லாமல் இன்றுவரை பூர்த்தி செய்துகொண்டுவருகிறார்கள்.


மேலே சொன்னவற்றோடு இஸ்லாமிய நாடுகளுக்கு இடையிலான ஆதிக்கப்போட்டியில் முக்கியமாக இருப்பது சன்னி, ஷியா என்ற இருபிரிவுகளுக்கு இடையில் இருக்கும் மோதல்கள்தான்! சன்னி பிரிவு முஸ்லிம்கள் தான் பெரும்பாலானவர்கள் என்றாலும் ஈரான் ஈராக் இந்த இரண்டு நாடுகளிலும் ஷியா பிரிவு முஸ்லிம்கள் முறையே 95% 65% என்று பெரும்பான்மையாக இருப்பது இப்போதைய பிரச்சினைகளுக்கு மூலகாரணம். சன்னி முஸ்லிம்களுடைய ஏகபோகத்தலைமையாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயலும் சவூதி அரேபியா, (ஈரானை) பாம்பின் தலையை அறுத்துவிட வேண்டும் என்று தொடர்ந்து அமெரிக்காவிடம் வலியுறுத்தி வருவதை இந்த நேரத்தில் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். சேகர் குப்தா இந்த 18 நிமிட வீடியோவில், வெள்ளிக்கிழமையன்று பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்கா டிரோன் தாக்குதலில் ஈரானிய ஜெனெரல் காசிம் சொலைமானியை தீர்த்துக் கட்டியது, அதன் பின்னணி பற்றிக் கொஞ்சம் விளக்குகிறார். ஊடகங்களில் படித்துத் தெரிந்து கொள்ளக் கூடிய விஷயங்களுக்கும் மேலதிகத் தகவல் இந்த வீடியோவில் கிடைக்கிறது. பாருங்கள்!


இங்கே தனியார் சேனல்களின் விவாதக் கூச்சல்களுக்கு நடுவே,  வெற்றுப்பரபரப்புச் செய்திகளையே  பேசாமல், முக்கியமான செய்திகளின் பேரில் அர்த்தமுள்ள விவாதங்களை நம்முடைய ராஜ்யசபா டிவி நடத்திக் கொண்டிருப்பதை அறிவீர்களா? பார்த்திருக்கிறீர்களா? 

ஈரான் அமெரிக்கா இருநாடுகளுக்கிடையில் காசிம் சொலைமானி தீர்த்துக்கட்டப்பட்ட விவகாரம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியிருப்பதன் பின்னணியில் ஒரு விவாதம்.  26 நிமிடங்கள். விஷயம் இன்னதென்று புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்  என்று பரிந்துரை சொல்கிறேன்.

மீண்டும் சந்திப்போம். 
             

2 comments:

  1. இதற்கு முன்னாள் அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளின் மீது தாக்குதல் நடந்ததற்கும் இப்போது நடந்ததற்கு ஒரு மிகப்பெரிய வித்யாசம் இருக்கிறது. எண்ணெய் விலை அதிகரிக்கும் என்பதில் எந்த மாறுதலும் இல்லை. கண்டிப்பாக அதிகரிக்கும். ஆனால், இதனால் அமெரிக்கா விற்கு பாதிப்பு வராது. கொஞ்சம் கொஞ்சமாக ஷேல் ஆயில் எடுக்கும் தொழில் நுட்பத்தினால் ஆயில் விஷயத்தில் அமேரிக்கா தன்னிறைவு அடைந்து விட்டது. இப்போது விலை உயர்ந்தால், அதிக விலைக்கு விற்கலாம். டாலர் மதிப்பு அதிகரிக்கும். வழக்கம் போல மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் வளங்களை கைக்குள் போட்டுக்கொள்ளலாம். தேர்தலில் வெற்றி பெறவும் இது உதவும்.

    ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடித்திருக்கிறார் ட்ரம்ப்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பந்து!

      சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று இந்தப்பக்கங்களில் ஒரு வழக்கு உண்டு. ராஜீய விவகாரங்களிலும் அது உண்மைதான் என்பதை அப்பட்டமாக டொனால்ட் ட்ரம்ப் அடுத்தடுத்த நாட்களில் இரு தாக்குதல்களை நடத்தி நிரூபித்திருக்கிறார். டெமாக்ரட்டுகளுடைய எதிர்ப்பு மிக பலவீனமாக இருப்பதிலேயே, 2020 அதிபர் தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதும் தெளிவாகிவிட்டது. ஆனால் எண்ணெய் அரசியலில் அமெரிக்காவின் பிடி இறுக்கமாக இருப்பது புரியாமலேயே இங்கே தமிழகத்தில் உள்ளூர் முஸ்லிம்கள் அமெரிக்க தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது?

      Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை