Thursday, July 2, 2020

இந்தியா பாகிஸ்தான் சீனா! திரண்டு வரும் போர்மேகங்கள்!

இந்தப்பக்கங்களில் சீனா எழுபது என்று சென்ற வருட அக்டோபர் மாதத்தில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சி, சீனத்தை ஆள ஆரம்பித்த எழுபதாவது ஆண்டுக் கொண்டாட்டங்களைப் பற்றி எழுதிய பதிவுகளில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும், சீன அதிபருமான ஷி ஜின்பிங் தனது கனவுத்திட்டத்தை முன்வைத்துப் பேசியதை கொஞ்சம் பார்த்திருக்கிறோம். 2049 ஆம் ஆண்டுக்குள் சீனாவை உலகின் வலிமையான பொருளாதாரமாகவும், சக்தியாகவும் உருவாக்குவதற்கு சபதம் எடுத்துக் கொண்ட மாதிரி மேலோட்டமாக இருந்தாலும், ஷி ஜின்பிங்  தன்னுடைய ஆயுள் காலத்திலேயே சீனாவை உலகின் நட்ட நடுநாயகமாக (Tianxia) ஆக்க முயற்சிக்கிறாரா அல்லது உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சரிந்து கொண்டிருக்கிற தனது இமேஜைக் காப்பாற்றிக் கொள்ள தடாலடி நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறாரா? சீனாவின் அண்மைக்கால நடவடிக்கைகளில்  இப்படி சந்தேகம் எழுந்திருப்பதென்னவோ நிஜம்! 


The Print  தளத்தில் சேகர் குப்தா சீனாவைக் குறித்து  உலகநாடுகளிடம் அதிகரித்துவரும் எச்சரிக்கை உணர்வு குறித்து சில முக்கியமான விஷயங்களை இந்த 25 நிமிட வீடியோவில் சொல்கிறார். சீனாவுடன் நெருக்கம் காட்டுவதற்காக, தங்களுடைய நீண்ட காலக் கூட்டாளியான அமெரிக்காவை உதறிய ஆஸ்திரேலியா, பிரிட்டன் இவைகளுடன் நியூசிலாந்து, கனடாவும் சேர்ந்து சீனாவைக் குறித்தான தங்களுடைய கொள்கை அணுகுமுறையில் தலைகீழ் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன. இந்த நாடுகள் மறுபடியும் அமெரிக்க நிலையை ஆதரிக்க ஆரம்பித்திருப்பதற்கு, ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு காரணம் இருந்தாலும், ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய சீனாவுடன் நெருக்கம் என்கிற நிலைமை இப்போது இல்லை என்பதில் சீனாவுடைய பேராசையுடன் கூடிய ஆதிக்க விஸ்தரிப்புக் கனவுகள் தான் என்பது மிக முக்கியமான காரணம். சீனாவுடன் நெருக்கம் காட்டியதற்காக இப்போது மிகவும் வருத்தப் படுவது ஆஸ்திரேலியா தான்! தனது பாதுகாப்பு பட்ஜெட்டை 40% அதிகரித்து, தனது வருத்தத்துக்குப் பரிகாரம் தேட ஒரு ஆரம்பத்தைத் தொடங்கி வைத்து இருக்கிறது.

பிரிட்டனுக்கு வேறுவிதமான பிரச்சினை! ஹாங்காங் கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்குச்  சீனா, கடுமையான சட்டத்தை சிலநாட்களுக்கு முன் அமல் படுத்தியதில், விரும்புகிற ஹாங்காங் குடிமக்களுக்கு பிரிட்டிஷ் குடியுரிமை வழங்க முன்வந்திருக்கிறது. ஆங்கிலம் பேசும் நாடுகள்தான் இப்படி என்றில்லாமல் 
இத்தனைகாலம் பின்னுக்குத் தள்ளி வைக்கப்பட்டு இருந்த தைவான் விஷயமும் கூட இப்போது முன்னுக்கு வர ஆரம்பித்திருக்கிறது என்பதில் சீனத்துப்பூனைக்கு மணிகட்ட  உலகநாடுகள்  பலவும் ஒன்று சேர ஆரம்பித்திருக்கின்றன.

ஆனால் சீனத்துச் சண்டியர் தன்னுடைய உதார்களைக் கொஞ்சமும் குறைத்துக் கொள்ளவில்லை. இந்திய எல்லையில் தனது படைகளைக் குவித்து வருவதோடு, பாகிஸ்தான், நேபாளம் இவைகளையும் இந்தியாவுக்கு எதிராகக் கொம்புசீவிவிட்டுக் கொண்டிருக்கிறது. இந்தத் துண்டு துக்காணிகளோடு, வங்காளதேசம், இலங்கை நாடுகளும் சீனாவுடன் கைகோர்க்கலாம். இன்னமும் இவ்விரு நாடுகளுடைய நிலைபாடும் தெளிவாகத் தெரியவில்லை.

ஒரு முழு அளவிலான யுத்தம் இந்தியா சீனாவுக்கிடையே வருமா என்பது சந்தேகமே. ஆனால் முட்டலும் உரசலும் இன்னும் நீண்டநாட்களுக்கு நீடிக்கும். ஒப்பீட்டளவில் சீனாவுடைய ராணுவபலம் இந்தியாவை விட அதிகம் தான் என்றாலும், தன்னுடைய முழுபலத்தையும் காட்டுகிற நிலையில் சீனா இல்லை. முன்னர் 1962 இல் இந்தியாவுக்கு இருந்த பலவீனமான அரசியல் தலைமை மாதிரி  இப்போது இல்லை என்பதோடு இந்திய ராணுவம் இப்போது முழுமையாகத் தயார் நிலையில் இருக்கிறது.

துப்பாக்கி, பீரங்கிகளை விட சீனாவை உயிர்போகிற மாதிரி வலிக்கிற இடமாகப் பொருளாதாரரீதியிலான அடியை இந்தியா கொடுத்திருக்கிறது. டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளை இந்தியா தடை செய்திருப்பதில், டிக்டாக் நிறுவனம் ஒன்றுக்கு மட்டுமே 45000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படலாம் என்கிறார்கள். Huawei  நிறுவனத்துக்கான தடையை அமெரிக்கா மட்டுமே இதுநாள்வரை வலியுறுத்தி வந்தது. இப்போது வேறுபல நாடுகளும் சீனத்தயாரிப்புகளுக்குத் தடை விதிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.  
 
பாகிஸ்தானியர்கள் பாடு திண்டாட்டம்தான்! சீனாவுடன் சேர்ந்து கும்மியடிக்கலாம் என்கிற கனவும் கூட நீண்ட  நாட்களுக்கு நிலைக்காது என்கிறமாதிரித்தான் நிலவரம் இருக்கிறது. நேபாளத்துக் கம்யூனிஸ்ட் அரசின் நிலைமைகூட பரிதாபம்தான்! அண்ணன் மகிந்த மாதிரி கோத்தபய ராஜபட்சே சீன ஆதரவு நிலை எடுப்பாரா என்பது கூட 9 ரூபாய் நோட்டு மாதிரியான கேள்விதான்!  

மீண்டும் சந்திப்போம்.   
         

8 comments:

  1. பொறுத்திருப்போம்...

    முட்டைக்குள்ளிருந்து என்ன வரப்போகிறதோ!..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் துரை செல்வராஜூ சார்!

      ஒரிஜினல் முட்டையாயிருந்தால் குஞ்சு வரும் என்று சொல்லிவிடலாம்! சீனத்து சண்டியர்களை, உதார்களை அப்படிக் கணித்து விடமுடியாதே! அதனால் தான் நம்முடைய ராணுவம் தயார்நிலையில் இருக்கிறது. மத்திய அரசும் கவனமாகக் காய் நகர்த்தி வருகிறது.

      Delete
  2. சீனாவை அவ்வளவு எளிதாக கட்டுப்படுத்த முடியாது என நினைக்கிறேன். அமெரிக்காவில் சரியான தலைமை இல்லாததும் தலை விரித்தாடும் கரோனாவும் இதை மேலும் சிக்கலாக்குகிறது.

    ஆஸ்திரேலிய நிறுவனங்கள் பலவற்றை சீன கைப்பற்றி விட்டது. அதனால் ஆஸ்திரேலியா பெரிதாக ஒன்றும் பண்ணமுடியாது.

    இடியாப்ப சிக்கலில் உலகம்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பந்து!

      சீனத்துச் சண்டியரை நான் குறைத்து மதிப் பிடவில்லை. அதேநேரம் சீனபூச்சாண்டிக்கெல்லாம் இந்தியா அயர்ந்து போய் நிற்கும் சூழலும் இல்லை. அமெரிக்காவில் சரியான தலைமை இல்லை என்பது உண்மைதான்! பாராக் ஒபாமாவின் எட்டு வருடங்கள் + டொனால்ட் ட்ரம்பின் மூன்றரை வருடங்கள்சீனாவை தட்டிக் கேட்க ஆளில்லாத சண்டப்பிரசண்டனாகக் கொம்புசீவிவிட்டிருக்கிறது என்பது எந்த அளவு உண்மையோ, அதே அளவு
      செனக்கம்யூனிஸ்ட் கட்சி அதன் அகலக்கால் வைப்பதிலேயே சரிந்துவிழும் என்பது என்னுடைய கணிப்பு.

      Delete
    2. கடைசிவரி இன்னும் கொஞ்சம் தெளிவாக இருந்திருக்க வேண்டும் பந்து! ஆகாசத்தில் க்ற்பனைக் கோட்டை கட்டுவது கம்யூனிஸ்ட் கட்சிகளுடைய பொதுவான குணம். மாசேதுங் சிந்தனைகள் கலாசாரப்புரட்சி .என்று ஒன்றரைக்கோடி சீனமக்களை பலிகொடுத்தது நினைவிருக்கிறதா? இப்போது ஷி ஜின்பிங் சிந்தனைகள் எத்தனை கோடி சீனர்களை பலிகொடுக்கப்போகிறதோ?

      Delete

  3. 1. நியூசிலாந்தில் வாழும் துளசி கோபால் அவர்கள் எழுதிய தகவல் இது. அங்கு இரண்டு நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விட்டு விட்டு தொழில் நுட்பத்தை இறக்குமதியாகிக் கொண்டிருந்த சீன நிறுவனத்திடம் கொடுத்து விட்டு அவர்கள் பொருட்களை நியூசிலாந்தில் இறக்குமதி செய்யும் ஏகபோக உரிமையைப் பெற்றார்கள். உள்ளூர் வேலை வாய்ப்புகள் பறிபோய்விட்டது. காரணம் மக்கள். அரசு. ஆதரிக்கத் தவறிய காரணம்.
    2. அங்கு மட்டுமல்ல உலகம் முழுக்க இப்படித்தான் உள்ளது. இந்தியாவையும் சேர்த்து.
    3. மோடி வந்தவுடன் மேக் இன் இந்தியா திட்டம் விரைவு பெறும் என்றே நம்பினேன். இந்த நிமிடம் வரைக்கும் திருப்பூர் பக்கம் காங்கு போலவே பாஜகவும் திரும்பிப் பார்க்கத் தயாராக இல்லை என்பதே கசப்பான உண்மை.
    4. கட்சி சார்பற்று யோசித்துப் பாருங்கள். தமிழகத்தில் உள்ள தொழிற்பேட்டைகள் எந்த அளவுக்கு இருந்தன. இப்படி எப்படியுள்ளது? என்ன காரணம்? ஆண்ட அரசுகள் என்ன செய்தது? சீனாவை எப்படி நாம் குறை சொல்ல முடியும்.
    5. இப்போது ரயில்வே தனியார்த் துறை வசம் போய்ச் சேர்ந்துள்ளது. பாராட்டலாம் என்று யோசிக்கும் போது பிஎஸ்என்எல் என்ன நிலைமையில் உள்ளது என்பதை யோசித்துப் பாருங்கள்.
    6. ஆறு வருடம் பாஜக ஆண்டு என்ன சாதித்துள்ளார்கள் என்பதனை விட பிஎஸ்என்எல் விசயத்தில் என்ன கொள்கை முடிவு எடுத்துள்ளார்கள் என்பதே புரியாத புதிராக உள்ளது.
    7. அதிகமான ஊழியர்கள், சங்கம், அமைச்சராக இருந்தவர்கள் செய்த அக்கிரமங்கள் என்று பட்டியலிட்டாலும் கடந்த ஆறு ஆண்டுகளில் ரயில்வே துறை மாற்றங்கள் நம் கண்களுக்குத் தெரிகின்றது. ஏன் தொலைத் தொடர்புத் துறையில் இவர்களால் சரியான முடிவு எடுக்க முடியவில்லை.
    8. 70 000 கோடி ரூபாய் பிஎஸ்என்எல் க்கு ஒதுக்கி ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. 75 000 பேர்களை வீஆர் எஸ் கொடுத்து அனுப்பியாகிவிட்டது. அரசு நினைத்த சீர்திருத்தங்கள் செய்த போதிலும் அந்தத் துறையை ஏன் காவு வாங்குகின்றார்கள்.

    ReplyDelete
  4. 9. உலகமே 5ஜி பக்கம் போய்க் கொண்டிருக்கும் போது நாம் 3ஜி பக்கம் வந்து நின்று அதுவும் தள்ளாடிக் கொண்டு இருக்கின்றோம். 4ஜி முறைப்படி அறிவிப்பு வராத போது தனியார் நிறுவனங்கள் அதைச் சொல்லி காசு பார்ப்பதும் முறையற்ற சேவை வழங்கத் தயாராக இல்லை என்பதனை நீங்களும் அறிந்ததே. சென்னையில் உள்ள ஏர்டெல் ஜியோ சேவையை அங்குப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களிடம் கேட்டுப் பாருங்கள். பிஎஸ்என்எல் உள்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு காலத்தில் ஏர் டெல் ஒரு ஜிபி க்கு 200 வாங்கி உண்டு கொழுத்து வாழ்ந்த கதையெல்லாம் நாம் அறிந்ததே. ஆனால் அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகையைக் கூட உச்ச நீதிமன்றம் தலையிட்டு மிரட்டிக் கவனித்துக் கண்காணித்துத் தானே பாதியளவு வசூலிக்க முடிந்துள்ளது. அரசின் மௌனமும் ஒத்துழைப்பும் எதை நமக்குக் காட்டுகின்றது? என்ன வெளிப்படைத்தன்மை இந்த ஆட்சியில் உள்ளது?
    10. கொரானா என்பது சாதாரண நோய் என்று சித்த மருத்துவம் (உண்மையான மருத்துவர்கள்) காட்டுக் கத்தலாகக் கதறுகின்றார்கள். மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்வதில்லை. ஆதரிக்கவும் இல்லை. ஆனால் 103 ரூபாய் மாத்திரை வருகிறது. குணப்படுத்தாது. ஆனால் பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பு வருகின்றது. ஆனால் அரசு கபசுர நீர் குடிநீரை வழங்குகின்றார்கள். ஆனால் சீன மருத்துவத்தில் இன்று வரையிலும் அவர்கள் பராம்பரிய மருத்துவ முறைகள் தான் முன்னணியில் உள்ளது என்பதனை தாங்கள் அறிந்ததே.
    11. இராணுவ வீரர்கள் பலியாகவில்லை என்று முதல் அறிவிப்பும் பிறகு 20 பேர்கள் பலியானார்கள் என்ற அறிவிப்பும் வந்தது.
    12. சீனா உருவாக்க விரும்பும் ஒரே சாலை மத்திய ஐரோப்பா என்ற திட்டம் அமெரிக்காவிற்கு ஆகாது என்பதற்காகவும் நமக்குக் குந்தகம் வரக்கூடும் என்பதற்காகவும் வெறுக்கலாம். அதுவொரு அற்புதத் திட்டம். நாம் ஒப்பந்தம் போட்டு அதனைப் பயன்படுத்த முயலாம். காரணம் இங்கே ஒரு திட்டம் நிறைவேற்ற வேண்டும் என்றால் இங்குள்ள பிணந்திண்ணிகளைக் கடந்து அடைவது எளிதல்ல.
    13. நம் சந்துக்குள் இருக்கும் பணக்காரனை எவரும் பகைத்துக் கொள்ள மாட்டார்கள். உலகமே எதிர்த்து நிற்கலாம். ஆனால் சீனாவின் காட்டாட்சி, அவர்கள் உருவாக்க நினைக்கும் கொள்கைகளை உடனே நிறைவேற்றும் சர்வாதிகாரம், அறம் சார்ந்த எந்த விசயங்களும் நமக்குத் தேவையில்லை. நம் இலக்கு பணம் செய்வது மட்டுமே என்று வாழும் சீனாவின் அரசியல் அமைப்பு மேலும் மேலும் அவர்களை வளர்க்கத்தான் செய்யும்.
    14. எந்தக் காலத்திலும் அமெரிக்கா சீனா வை பகைத்துக் கொள்ளவே முடியாது. அமெரிக்காவில் சீனா செய்த பங்குகளை எடுக்கின்றோம் என்று சீனா அறிவிப்பு வெளியிட்டாலே போதும் பங்காளிக்கு வாந்தி பேதி வந்து விடும். டாலர் வரலாறு காணாத வீழ்ச்சி அடையும். சீனா அதைச் செய்யாமல் இருக்கக்காரணம் அமெரிக்கா மேல் உள்ள பாசம் அல்ல. அதன் மூலம் தாங்கள் சம்பாதிக்க வாய்ப்புள்ளதே காரணம். நினைத்த நேரத்தில் யுவான் மதிப்பை ஏற்றுவதும் இறக்கி கபடி விளையாட்டு விளையாடும் சீனாவிற்கு கை வந்த கலை.
    15. ஊழல் இல்லாத அரசு பாஜக சொல்வதை வரவேற்கிறேன். ஊழலைக் காணச் சகிக்காத அரசு என்றும் சொல்லும்பட்சத்தில் தமிழகத்தில் கொரானா காலத்தில் கூட நடக்கும் கொள்ளையை நிறுத்த முடியும் அல்லவா?
    16. காங்கிரஸை நினைத்தால் பாஜக ஒரு மாதத்தில் பூண்டோடு அழிக்க அத்தனை சட்டப்படியான வாய்ப்புகளும் உள்ளது. காரணம் உடம்பு முழுக்க சிரங்கு வந்த அதனுடன் காலம் முழுக்க வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களுக்கு அத்தனை வாய்ப்புகளையும் இவர்கள் தான் ஒவ்வொரு முறையும் உருவாக்கிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதே நாம் காணும் உண்மை.
    (நீண்ட நாளைக்குப் பிறகு உங்கள் பதிவை விடப் பெரிதாக ஒரே மூச்சில் அடித்து விட்டேன்)

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி!

      எனக்கு நியூசிலாந்து பதிவரைத் தெரியாது. ஆனால் வெளியுறவுக் கொள்கை வர்த்தகக் கொள்கை இவைகளை பற்றி அலசி ஆராய்ந்து கருத்துக்களைச் சொல்லும் வல்லுநர்கள் பலரும் எழுதுவதைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அவைகளின் மீதே என்னுடைய கருத்தாகப் பதிவில் சுருக்கமாகச் சொல்கிறேன். நியூசிலாந்தை . விட ஆஸ்திரேலியா கடந்த 5 ஆண்டுகளாக சீனாவிடம் அதிக நெருக்கமும் இ, ணக்கமும் காட்டி வந்ததில், அதனுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே சீனாவிடம் விலைபோனதும் கொஞ்சம் கொஞ்சமாக விழித்துக் கொள்ள ஆரம்பித்தது. ஜூன் 29 அன்று ஆஸ்திரேலியப்பிரதமர் ஸ்காட் மாரிசன் இதுவிஷயமாகப் பேசியிருப்பதைக் கொஞ்சம் தேடிப்படித்துப் பாருங்கள்.

      16 புள்ளிகளில் நீங்கள் எழுப்பியிருக்கிற ஐயங்களுக்குத் தனிப்பதிவாகத்தான் பதில் எழுத வேண்டும். சீனாவை ஒதுக்க முடியாதா என்று ட்வீட்டரில் நீங்கள் எழுப்பியிருந்த கேள்விக்கு கூட, அந்த வேலை தொடங்கியாயிற்றே என்று மூன்று தொடக்கப்புள்ளிகளைச் சொல்லியிருந்தேன். விரிவாகப்பேச வேண்டிய பலவிஷயங்களைப் பட்டியலிட்டிருக்கிறீர்கள். பேசுவோம்

      Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை