Sunday, July 4, 2021

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய இருக்கிறது. 70000 பார்வையாளர்களுடன்  டியனான்மன் சதுக்கத்தில்  நடந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சி எதைச் சொன்னது? சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றுச் சுவடுகளையா? கட்சிப்பெருமிதத்தையா? இவை எதுவுமே இல்லையாம்! ஷி ஜின்பிங்! என்கிற ஒற்றைப்புள்ளியை மகிமைப்படுத்துகிற மாதிரியே கொண்டாட்டம் நடந்தது, முடிந்தது!


சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர், நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங் ஒருமணிநேரம் பேசினார். பேச்சின் முக்கிய  அம்சமாக உலகநாடுகளை மிரட்டுவது இருந்தது. அமெரிக்கர்களை நேரடியாக எச்சரிப்பதாக மட்டுமே இருந்தது என்பதன் பின்னால் என்னென்ன இருந்ததாம்? இங்கே இந்திரா காலத்தில் தேவகாந்த் பரூவா என்கிற காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான் இந்திரா தான் இந்தியா இந்தியாதான் இந்திரா என்று உளறிய மாதிரி ஷி ஜின்பிங் தான் கட்சி! சீனக் கம்யூனிஸ்ட் கட்சிதான் ஷி ஜின்பிங்  என்று மாபெரும் தலைவர் மாவோவையும் மிஞ்சிய தலைவருக்கெல்லாம் தலைவராக உள்ளூர் மக்களுக்கும் உலகத்துக்கும் விளம்பரப்படுத்திக் கொள்ள நடத்திய நிகழ்ச்சியாக மட்டுமே இந்த நிகழ்ச்சி இருந்ததாம்! 


வேறு யார் ஒப்புக்கொள்கிறார்களோ இல்லையோ, கடன்வலையில் முழுமையாகச் சிக்கிக்கொண்டு சீனா ஆட்டுவிக்கிறபடியெல்லாம் ஆடவேண்டிய நிலையில் இருக்கிற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உய்கர் முஸ்லிம்களுடைய விஷயமாகத் தனக்கு எதுவும் தெரியாது என்று சிறிதுகாலத்துக்கு முன்புவரை சொல்லிக் கொண்டிருந்தவர், இப்போது சீன அரசு சொல்வதை அப்படியே நம்புகிறாராம்! ஏற்றுக் கொள்கிறாராம்! வேறு வழி?


ஷி ஜின்பிங் உள்ளூர்க் கூட்டத்துக்கு முன் வீர உரை நிகழ்த்திக் கொண்டிருந்த அதேநேரம், அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட், அதை மேற்கோள் காட்டி CNN முதலானவை சாட்டிலைட் படங்களைக் காட்டி சீனா யூமென் பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை Silo எனப்படும் பதுங்குகுழிகளில் தயார்நிலையில் வைத்திருப்பதாக, அதேமாதிரி இன்னொரு இடத்திலும் வைத்திருப்பதாக செய்தியைப் பரபரப்பாகப் பரப்பிக் கொண்டிருந்ததை மேலே 6 நிமிட வீடியோவில் நையாண்டி செய்கிறார்கள். இரண்டாவது உலகப்போரில் இங்கிலாந்து இதேமாதிரி அட்டையினால் செய்த நூற்றுக்கணக்கான டாங்குகளை படம்பிடித்து ஜெர்மனியைக் குழப்பியது நினைவுக்கு வருமேயானால் ஏய்ப்பதில் கலைஞர்களான பிரிட்டிஷ் அரசியல்வாதிகளையும் சீனர்கள் மிஞ்சிவருகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஏய்ப்பதில், திசை திரும்புவதில், வெற்றுக்கோஷங்களிலேயே  எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடும் வல்லமை கொண்டது கம்யூனிஸ்ட் கட்சி என்பதை இப்போதாவது ஒப்புக் கொள்கிறீர்களா?

மீண்டும் சந்திப்போம்.      

Thursday, July 1, 2021

நூறு பூக்கள் மலரட்டும்! நூற்றாண்டு காணும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றுக்கோஷங்கள்!

ஜூலை 1 சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு! இது குறித்து ஏராளமான செய்திக்குறிப்புக்கள், கட்டுரைகள் என்று வந்து கொண்டே இருக்கின்றன. கம்யூனிஸ்ட்டுகளைக் கவனிப்பவர்களுக்கு, அவர்களுடைய கிளர்ச்சியூட்டும்  கோஷங்கள் மிகவும் பரிச்சயமாகியிருக்கும். இப்படி வெறும் கோஷங்களே மிகப்பெரிய அரசியல் செயல்பாடுகளைத் தீர்மானிப்பதாக ஆரம்பமானதே சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து தான், அதன் பிதாமகர் மா சேதுங் தான் என்பதைப் புரிந்துகொள்ள பிபிசி தளத்தில் இன்று வெளியாகி இருக்கும் இந்தச் செய்திக் கட்டுரை கொஞ்சம் உதவியாக இருக்கும்.  கடந்துவந்த நூற்றாண்டில் மா சேதுங் முதல் தற்போதைய ஷி ஜின்பிங் வரை எப்படி கோஷங்களே அரசியலானது (பல சமயங்களில் படுஅபத்தமாகவும்) என்பதை ஒரு 11 கோஷங்களை எடுத்துக்கொண்டு சுருக்கமாகப்பேசும் கட்டுரை இது.
இந்த 6 நிமிட வீடியோவில் ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் இரு பிரதிநிதிகளுடன் மிகச் சிறிய அளவிலான சீனர்களுடன் 1821 ஜூலை 1 அன்று துவங்கிய சீனக்கம்யூனிஸ்ட் கட்சி நாற்பது வருடங்களுக்குக்காகவே ரஷ்யர்களையும் மிஞ்சிய அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையாவாக மாறியது என்பது சரித்திர விசித்திரம். இந்த விசித்திரத்தை இந்து தமிழ்திசை நாளிதழில் மு ராமநாதன் கொஞ்சம் பிரமிப்புடன் எழுதியிருக்கிறார். 

எல்லாப் பேரியக்கங்களின் பயணமும் சிறிய அடிவைப்பில்தான் தொடங்கியிருக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பயணமும் அப்படித்தான் ஆரம்பமானது. நூறாண்டுகளுக்கு முன்னால், இதே நாளில் (ஜூலை 1, 1921) ஷாங்காய் நகரில், ஒரு ஓட்டு வீட்டில் கட்சி நிறுவப்பட்டது. மூன்று வாரங்களுக்குப் பிறகு, அங்கே நடந்த கூட்டத்தில் 57 பேராளர்கள் கலந்துகொண்டனர். அதில் ஹூனான் விவசாயி மகன் ஒருவரும் இருந்தார். பீஜிங் பல்கலைக்கழகத்தில் நூலக உதவியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த அந்த இளைஞரின் பெயர் மா சேதுங். அவரது படம்தான் இப்போது தியானென்மென் சதுக்கத்தின் முகப்பை அலங்கரித்துவருகிறது.

முன்கதை: பல சாம்ராஜ்ஜியங்களின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் பிறகு ஜனவரி 1, 1912 அன்று சீனக் குடியரசு பிறந்தது. புதிய குடியரசை உருவாக்கிய அமைப்புகள் டாக்டர் சன் யாட் சென்-ஐத் தலைவராக நியமித்தன. சன் ஒரு அறிவுஜீவி. திறமான அரசியலர் அல்லர். சீனா போன்ற பெரிய தேசத்தை அவரால் ஒரு குடையின் கீழ் கொண்டுவர முடியவில்லை. நாடெங்கிலும் யுத்த பிரபுக்கள் போராட்டங்களிலும் கலகங்களிலும் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர். மறுபுறம் வெளிநாட்டு ஆக்கிரமிப்பும் இருந்தது. இதனால், சினமுற்ற சீன இளைஞர்கள் மே 4, 1919 அன்று தியானென்மென் சதுக்கத்தில் கூடினார்கள். ‘மே 4 இயக்கம்’ என்று வரலாறு குறித்து வைத்திருக்கும் இந்தப் போராட்டம்தான், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தொடக்கம் குறித்தது. இந்த இயக்கத்தை முன்னின்று நடத்திய லீ தாவ்ஜவ், சென் து சியூ எனும் இருவர்தான் 1921-ல் கம்யூனிஸ்ட் கட்சியையும் நிறுவினார்கள். இதில் முன்னவர் மாவோவின் குரு.

முதல் உள்நாட்டு யுத்தம் (1927-1937) ::சன் 1925-ல் மறைந்தார். அடுத்து, சீனக் குடியரசின் ஆட்சியையும் ஆளுங்கட்சியாக இருந்த கோமிங்டாங் கட்சியையும் கைப்பற்றினார் சியாங் கை ஷேக். சோவியத் ஒன்றியம் கோமிங்டாங்குக்கு ஆதரவாக இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியையும் கோமிங்டாங்குக்கு இசைவாக இருக்கும்படி வலியுறுத்தியது. ஆனால், சியாங் கம்யூனிஸ்ட்டுகளை எதிரிகளாகப் பாவித்தார். அவர்களை ஒழித்துக்கட்டத் தொடங்கினார். அதற்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி தனக்கான ராணுவத்தைக் கட்டியது. அதற்கு ஆகஸ்ட் 1, 1927-ல் மக்கள் விடுதலை ராணுவம் என்று பெயரிட்டது. அதுதான் இன்று உலகத்தின் மிகப் பெரிய ராணுவமாக வளர்ந்திருக்கிறது.

கோமிங்டாங்குடனான யுத்தத்தின்போது ஒரு கட்டத்தில் மாவோ பின்னேறும் தந்திரத்தைப் பயன்படுத்தினார். கோமிங்டாங் பலவீனமாக இருக்கும் இடங்கள் வழியாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடைப்பயணத்துக்கு ‘நெடும் பயணம்’ (1934-35) என்று பெயர். பயணத்தின்போது பசியிலும் பனியிலும் பலியானவர்கள் பலர். என்றாலும், அந்தப் பயணத்தில் எண்ணற்ற கிராமங்கள் வழியாக ராணுவம் முன்னேறியது. இதன் மூலம் கட்சி மக்களுக்கு நெருக்கமாகியது. மாவோ மக்கள் தலைவரானார்.

ஜப்பானிய ஆக்கிரமிப்பு (1937-1945)::வல்லரசாகும் கனவில் இருந்த ஜப்பான், சீனாவின் பல பகுதிகளை ஆக்கிரமித்துவந்தது. உச்சமாக 1937-ல் நான்ஜிங் நகரில் ஜப்பான் நிகழ்த்திய வன்கொடுமைகள் வரலாற்றைக் கரிய பக்கங்களால் நிறைத்தன. இந்தக் காலகட்டத்தில் கோமிங்டாங்கும் கம்யூனிஸ்ட்டுகளும் ஒன்றிணைந்து தங்களது பொது எதிரியான ஜப்பானை எதிர்த்தனர். சீனர்கள் இழந்தது அதிகம். எனினும் விடாப்பிடியாகப் போராடினார்கள். இரண்டாம் உலகப் போரின் (1939-45) முடிவு ஜப்பானுக்குச் சாதகமாக இல்லை. அது நேச நாடுகளிடம் சரணடைந்தது, சீனாவிலிருந்தும் வெளியேறியது.

இரண்டாம் உள்நாட்டு யுத்தம் (1945-1949)::பொது எதிரி வெளியேறியதும் உள்நாட்டு யுத்தம் தொடர்ந்தது. இந்த முறை கோமிங்டாங்குக்கு அமெரிக்கா உதவியது. எனில், கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்கள் ஆதரவு பெருகியிருந்தது. ஆயுத பலமும் கூடியிருந்தது. ஆகவே, வெற்றி வசமானது. கோமிங்டாங்கின் தலைவர் சியாங், தைவானுக்குத் தப்பியோடினார். அக்டோபர் 1, 1949 அன்று தியானென்மென் சதுக்கத்தின் முகப்பில் மக்கள் சீனக் குடியரசை நிறுவினார் மாவோ.

மாவோவின் காலம் (1949-1976)::பெரும் கனவுகளோடு தொடங்கியது கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி. ‘நூறு பூக்கள் மலரட்டும்’ என்பது மாவோவின் புகழ்பெற்ற மேற்கோள்களில் ஒன்று. எல்லாக் கருத்துகளும் முட்டிமோதித் தெளியட்டும் என்பது பொருள். ஆனால், அவரது ஆட்சியில் விமர்சனங்கள் சகித்துக்கொள்ளப் படவில்லை. கூட்டுப் பண்ணைகளையும் தொழில் உற்பத்தியையும் இலக்காகக் கொண்டு மாவோ தொடங்கிய பெரும் பாய்ச்சல் திட்டமும் (1958-1962), பழமையைத் தகர்ப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட கலாச்சாரப் புரட்சியும் (1966-1976) பலன் தரவில்லை. மாறாக, பஞ்சம் வந்தது. மக்கள் மடிந்தனர், அச்சுறுத்தலுக்கு உள்ளாயினர். பின்னாளில் கட்சி இந்த இரண்டு முன்னெடுப்புகளும் பிழையானவை என்று ஒப்புக்கொண்டது. அதே வேளையில், மாவோவின் காலத்தில்தான் சீனா ஒரு தேசமாகத் திரண்டது, மக்களின் கல்வியறிவும் ஆரோக்கியமும் வளர்ந்தது.

தாராளமயத்தின் காலம் (1978-2013)::1976-ல் மாவோ காலமானார். அடுத்து, தலைமை ஏற்ற டெங் சியோ பிங்,1978-ல் அந்நிய முதலீடுகளுக்கு வாசல் திறந்தார். சீனாவின் அபரிமிதமான மனித வளத்தைப் பயன் படுத்தி நாட்டைத் தொழில்மயமாக்கினார். செல்வம் சேர்ந்தது. அந்த அதிவேக வளர்ச்சியின் காலத்தில் டெங் தனது சகாக்களை சர்வதேச அரங்கில் அடக்கி வாசிக்கச் சொன்னார். ‘உன் சக்தியை வெளிக்காட்டிக்கொள்ளாதே’ என்றார். தனது பாதைக்கு டெங் வைத்த பெயர் சீனா பாணியிலான சோஷலிஸம். டெங் சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்காக மட்டுமல்ல, 1989-ல் தியானென்மென் அடக்குமுறைக்காகவும் நினைவுகூரப் படுகிறார். 1919-ஐப் போலவே 1989-லும் தியானென்மென்னில் போராடியவர்கள் இளைஞர்கள். அவர்கள் ஜனநாயக உரிமைகளுக்காகவும் ஊழலுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார்கள். இந்த முறை தன் மக்களின் போராட்டத்தை ஒடுக்கியது ‘மக்கள் விடுதலை ராணுவம்’. மாணவர்கள் மட்டுமல்ல; சாலையோரம் வேடிக்கை பார்த்தவர்களும் துருப்புகளால் கொல்லப்பட்டார்கள். சீனாவின் வரலாற்றில் அழிக்க முடியாத கறுப்புப் பக்கங்களில் ஒன்றானது தியானென்மென் படுகொலைகள்.

ஷி ஜின்பிங் காலம் (2013- இன்றுவரை)::ஷி ஜின்பிங் 2012-ல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலரானார். பிறகு, அதே ஆண்டு முப்படைகளின் தலைவரானார். அடுத்து, 2013-ல் நாட்டின் அதிபரானார். இந்த வரிசை எதேச்சையானதல்ல. கட்சி (1921), ராணுவம் (1927), ஆட்சி (1949) என்பதுதான் வரலாற்றின் வரிசை; முக்கியத்துவத்தின் வரிசையும் அதுதான். ராணுவமும் ஆட்சியும் கட்சிக்குக் கட்டுப் பட்டவை. இந்த நூற்றாண்டு விழாவில் இதை ஷி மீண்டும் நிறுவுவார். தனக்கு முந்தைய தலைவர்களிலிருந்து ஷி வேறுபட்டவர். ஷி-க்கு முன்பு அதிபராக இருந்த ஜியாங் ஜெமின் (1993-2003), ஹு ஜின்டாவ் (2003-2013) இருவரின் பதவிக்காலமும் பத்தாண்டுகள். இந்த விதியை ஷி மாற்றப்போகிறார். அவரது பதவிக்காலம் 2023-ஐத் தாண்டியும் நீடிக்கும். அடுத்து, சீனா அடக்கி வாசிக்க வேண்டும் என்று டெங் கருதினார். ஆனால், காத்திருப்பின் காலம் முடிந்து விட்டது என்பது ஷி-யின் கருத்து. தென்சீனக் கடலிலும், இந்திய எல்லையிலும், அமெரிக்க வணிகத்திலும் சீனா தனது ஆக்ரோஷமான முகத்தை வெளிப்படுத்துகிறது. இந்தியா இதற்கு ஏற்றவாறு காய் நகர்த்த வேண்டும்.

டெங்குக்கு மாவோவின் மீது விமர்சனங்கள் இருந்தன. எனில், மாவோவிடம் குற்றத்தைவிடக் குணமே அதிகம் என்றார் டெங். கட்சியின் அடையாளமாக மாவோவைத் தான் நிறுத்தினார் டெங். ஷி-யும் அதையேதான் செய்கிறார். ஆனால், ஒரு படி மேலே போகிறார். மாவோவின் நெடும் பயணமும், ஜப்பானிய எதிர்ப்பும் வரலாற்றில் இடம்பெறும். ஆனால், பெரும் பாய்ச்சல் திட்டமும் கலாச்சாரப் புரட்சியும் வரலாற்றில் அவசியமற்றவை என்பது ஷி ஜின்பிங்கின் கருத்து. அதாவது மாவோவின் குணம் மட்டும் வரலாற்றில் இடம்பெறும். கூடவே, சீனாவின் அடையாளமாக மாவோ மட்டுமில்லை, அடுத்த இடத்தில் ஷி-யும் இருப்பார் என்று எதிர்பார்க்கலாம். வருங்காலத்தில் தியானென்மென் சதுக்கத்தின் முகப்பில் மாவோவின் படத்துக்கு அருகில் ஷி-யின் படமும் இடம்பெறக்கூடும்.

ஒரு நூறு ஆண்டுகளின் கதையை இதற்கும் குறைவாக சுருக்கிவிட முடியாதுதான். ஆனால் முக்கிய நிகழ்வுகள், விளைவுகள், தலைவர்கள் உருவான விதம், அவர்களின் தாக்கம் இவைகளை இப்படி எழுத்தில் கொண்டுவந்து விட முடியாது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜப்பான் மிகவும்  பலவீனப்பட்டு, உள்ளூரிலும் போட்டி இல்லாமல் சண்டியரானவர் மா சேதுங். அவருடைய காலம் சீனமக்களுக்குப் பெரும் சோதனையும் அழிவும் தந்த காலம் என்பதைக் கட்டுரை சொல்ல மறந்தது, டியானன்மென் சதுக்கத்தில் மாணவர் போராட்டம் நசுக்கப்பட்டதை மட்டும் மிகைப்படுத்தி டெங் சியாவோ பிங் காலத்தில்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் அலப்பறை, வெற்றுக்கோஷங்கள் எல்லாம் அடக்கிவைக்கப்பட்டு பொருளாதார வளர்ச்சியில் தான் மக்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வும் இருந்தது என்பதை மெய்ப்பித்த காலம் என்பதை ராமநாதன் சௌகரியமாகக் கடந்து போய்விடுகிறார். ஷி ஜின்பிங் கம்யூனிஸ்ட் கட்சியை மாவோ காலத்தைய வெறியூட்டப் பட்ட நிலைக்குக் கொண்டுபோவதில் பெருமளவு வெற்றி பெற்று விட்டார் என்ற பிம்பம் தொடர்ந்து கட்டமைக்கப் படுவதன் உண்மை நிலவரத்தைக் காலம் தான் சொல்ல வேண்டும்.  

சீன வரலாறு மிகவும் நெடியது. அதன் கம்யூனிஸ்ட் கட்சி, ஆட்சியின் வரலாறு முழுக்க முழுக்க மிகைப்படுத்தப் பட்டது என்பது ஒரு பார்வை.              

 

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை