Sunday, May 16, 2021

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே என்னதான் பிரச்சினை?

இஸ்ரேல் உருவான விதத்தை, இரண்டாம் உலகப்போர் முடிவில் நாஜிகளால் வதைக்கப் பட்ட யூதர்கள் ஜெர்மனி, போலந்து, ரஷ்யா முதலான நாடுகளிலிருந்து புலம்பெயர  தங்களுக்கென்று ஒரு இடத்தைத் தேடியதில் இருந்து ஆரம்பிக்கலாம். அவர்களுடைய பூர்வீகமான இஸ்ரவேல், பாலஸ்தீனமாக இருந்ததைக் கண்டு தாயகம் திரும்ப ஆரம்பித்தார்கள் என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம் தான்! ஆனால் கச்சா எண்ணெய் அரசியலும், பிரிட்டனின் குள்ளநரித்தனமும், கிறித்தவ அஃகுறும்புமாகச் சேர்ந்து இப்போதைய பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் வித்தாக இருக்கிறது.

யூதர்களும் பாலஸ்தீனியர்களும் ஏன் தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்பதற்கான காரணம் இந்த ஆறு நிமிட வீடியோவில், பிபிசி தமிழ் சொல்கிற மாதிரி எல்லாம் இல்லை. உலகப் போர் முடிந்தபின்னாலும் கூட, பிரிட்டன் தன்னுடைய ஆதிக்கத்தை விடுவதாயில்லை. கூடவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஒருபுறம், கலீஃபா காலத்தைய இஸ்லாமிய சாம்ராஜ்யக் கனவுகளில் இருந்த அரபு நாடுகளும் இவர்களுடன் ஒட்டிக்கொண்ட சோவியத் ஒன்றியமுமாக மறுபுறம் என்று ஆட்டம் ஆரம்பித்ததில், யூதர்களுக்கும் அரபிகளுக்குமான சண்டை என்றானது. 2வது உலகப்போருக்கு முந்தைய வரலாற்றைப் பார்த்தால் கிறித்தவர்களுக்கும் அரபி முஸ்லிம்களுக்கும் நிறைய சண்டைகள் இருந்தது, ஆனால் யூதர்கள் முஸ்லிம்களுக்கிடையே சண்டை ஒருபோதுமிருந்ததில்லை. 

எப்பொழுதுமே மேற்காசியாவில் இஸ்லாமியருக்கு ஒரு தலமை இப்பொழுது இருந்ததில்லை ஆனால் முன்பு இருந்தது கலீபாக்கள், அரசர்கள், சுல்தான்கள் என அவர்கள் வலுவாய் இருந்தவரை சிக்கல் இல்லை, பின்னாளில் சுமார் 400 வருட காலம் ஆட்டோமன் துருக்கியர் அப்படி இருந்தனர்

முதல் உலகபோரில் அவர்கள் வீழ்ச்சி அடைந்தபின்பு அதை தொடர்ந்து அரேபியாவில் எண்ணெய் கண்டறிய பட்ட பின்பே இவ்வளவு குழப்பங்கள்,

வரலாறு ஒரு உண்மையினை சொல்கின்றது, அதை நீங்களும் நானும் ஒப்புகொள்ளத்தான் வேண்டும்

நபிகள் காலம் முதல் ஆட்டோமன் காலம் வரை பாலஸ்தீனத்தில் யூதர்கள் வாழ்ந்தனர், அரேபியாவில் வாழ்ந்தனர், ஆனால் ஒரு யூதனும் தாக்கபடவில்லை இஸ்லாமியர் ஆட்சியில் யூதர்கள் பாதுகாப்பாகவே இருந்தனர்

ஆனால் கிறிஸ்தவ தேசங்களான ஸ்பெயின் முதல் ரஷ்யா வரை அவர்களை போட்டு சாத்தினார்கள், கடைசியில் போட்டு மிதித்து குத்தாட்டம் ஆடியவன் ஹிட்லர் அவனுக்கு முன் ஆடியவன் கிறிஸ்தவ புரட்சியாளன் மார்ட்டின் லுத்தர் ஆக இஸ்லாமிய ஆட்சியில் யூதர்கள் பாதுகாப்பாக இருந்ததும், இப்பொழுது யூதர்கள் ஆட்சியில் இஸ்லாமியர் கொல்லபடுவதெல்லாம் வரலாற்று முரண்

ஆட்டோமன் துருக்கியருக்கு பின் வலுவான இஸ்லாமிய தலைமை இல்லை, அந்த இடத்தை துருக்கியின் கமால் பாட்சா கூட முயற்சிக்கவில்லை.ஆனால் 1960களில் எகிப்தின் கர்ணல் நாசர் அதை கைபற்றினார், அரபுக்களின் தலைவராய் இருந்தார் ஆனால் அமெரிக்கா இஸ்ரேலை முன்னுறுத்தி செய்த விண்வெளி போரில் அவர் தோற்றார்.

அவருக்கு பின் சதாம் உசேனுக்கு அந்த வாய்ப்பு இருந்தது, ஆனால் எண்ணெய் பணத்துக்கு ஈராக் பணம், எண்ணெய் பணம் மக்களுக்கே என அவர் எழுந்தது பல அரேபிய அரசர்களுக்கு பிடிக்கவில்லை

அதே நேரம் கொமேனியின் எழுச்சி ஷியா சன்னி மோதலை உக்கிரமாக்கி விவகாரம் திசைமாறி சதாம் வீழ்த்தபட்டார்.லிபிய அதிபர் கடாபிக்கு அந்த அரபு தலைவர் ஆசை வந்தது, அவரையும் "புரட்சி" என சொல்லி ஒழித்து கட்டினார்கள்

இப்போது அரேபியாவில் வலுவான தலைமை  ஈரான் ஆனால் அவர்களிடம் பணமில்லை வலிமையான ஆயுதமில்லை. சவுதி மிக சக்திவாய்ந்த எண்ணெய் வளநாடு, ஆனால் இஸ்ரேலுடன் ஒரு ரகசிய புரிதலில் உள்ளது. இப்போதைக்கு ஒரு பலமான படைகொண்ட நாடு நிச்சயம் துருக்கி, நேட்டோவின் நாடு ஐரோப்பிய ஒன்றிய நாடு என பலம் அதிகம்.எர்டோகன் இஸ்லாமிய தலைவராக பழைய ஆட்டோமன் சாம்ராஜ்ய வாரிசாக கருதிகொள்கின்றார், துருக்கியின் ஆட்சியில் நீடிக்க மக்கள் ஆதரவை பெற அவருக்கு இது நல்ல வாய்ப்பு. உண்மையில் மக்கள் அவரை கொண்டாடுகின்றார்கள், அவர் சொல்லுக்கு துருக்கி கட்டுபடுகின்றது

காஷ்மீர் முதல் பல விஷயங்களில் அவர் இஸ்லாமிய நலன் பேசுகின்றார், இஸ்லாமுக்கு எதிரான நாடுகளை துணிச்சலுடன் எதிர்க்கின்றார்.ஆர்மேனியா அசர்பஜான் மோதலில் ரஷ்யாவினை தாண்டி அசர்பைஜான் எனும் இஸ்லாமிய நாட்டுக்கு வெற்றியினை கொடுத்தது துருக்கி. உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக நிற்கும் நாடு துருக்கி.சிரியாவில் அமெரிக்காவின் கனவு நிறைவேறாமல் இருக்க மிக பெரிய தடையாக தன் ராணுவத்தை நிறுத்தியிருப்பது துருக்கி.உய்குர் விவகாரத்தில் சீனாவினை கண்டித்த நாடு துருக்கி, பிரான்ஸ் அரசின் இஸ்லாமிய விரோதத்தை கண்டித்து மொத்தமாக பொங்கி எழுந்த நாடு துருக்கி.

அந்த துருக்கியின் எர்டோகன் பாலஸ்தீனத்துக்கு தன் துருக்கிய படைகள் செல்லும் என அறிவித்துவிட்டார், இதற்கு துருக்கி மக்களிடம் பெரும் ஆதரவு கிடைத்தாயிற்று.எகிப்தின் கர்ணல் நாசருக்கு அடுத்து இந்த அறிவிப்பை எழுப்பிய ஒரே தலைவர் அவர்தான். அல் அக்சா மசூதியினை காக்க துருக்கிய படைகள் அமைதி படையாக செல்ல தயார் என அவர் அறிவித்திருப்பது உலக நாடுகளை யோசிக்க வைத்திருக்கின்றது, இதுவரை அமைதிபடை அங்கு இல்லை.

ஆனால் துருக்கி அறிவித்ததே தவிர படை அனுப்ப முடியாது, காரணம் அது பல சிக்கல்கள்.முதலில் அந்த அல் அக்சா மசூதியின் அறங்காவலர் ஜோர்டான் மன்னர், அவர் இன்னும் வாய் திறக்கவில்லை. இரண்டாவது ஐ.நா சபை இதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் அவர்களும் அமைதி. இஸ்ரேலை மீறி அல் அக்சா பக்கம் ஐ.நா அமைதி படை அல்லது இஸ்லாமிய அமைதிபடை வருவது எவ்வளவு சாத்தியம் என்பது தெரியவில்லை

இவ்வளவு சீரியசான விஷயத்தை இஸ்ரேல் சும்மா விடுமா? அது நேற்றே அலறலை ஆரம்பித்துவிட்டது

"பாலஸ்தீன கலவர வன்முறைக்கும் தீவிரவாதிகளின் ஆயுதங்களுக்கும் துருக்கிதான் பொறுப்பு, அவர்கள்தான் தூண்டி விடுகின்றார்கள், எங்களிடம் ஆதாரம் உண்டு" விஷயம் சீரியசாகின்றது, துருக்கி அதிபர் ஒரு இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவராக எழ கூடாது என வல்லரசுகள் கண் வைக்கின்றன‌

நாசர் முதல் கடாபி வரை என்ன நடந்ததோ அதையே எர்டோகனுக்கும் என்பது போல் முறைக்கின்றன, ஆனால் எர்டோகன் இதை அறியாதவர் அல்ல‌.

நேட்டோவில் இருந்து பிரியுமானால் துருக்கி மிகபெரிய பொருளாதார சரிவை சந்திக்கும், ராணுவ பலமும் கிடைக்காது என்பதும் இன்னொரு கோணம்.எப்படியோ பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பெரும் குரல் கேட்க தொடங்கிவிட்டது, ஆனால் எர்டோகனால் வெல்ல முடியுமா என்பது பெரும் கேள்வி.

லிபிய கடாபியினை மக்கள்  தலைக்கு மேல் வைத்து கொண்டாடினார்கள், அவ்வளவு அழகான ஆட்சி அவருடையது, லிபியா பிரான்ஸுக்கு நிகரான பொருளாதார பலம் கொண்டிருந்தது.அனால் அந்த மக்களை வைத்தே அவரை விரட்டினார்கள். பாலஸ்தீனத்தில் தலையிட்டிருப்பதால் எர்டோகனோ இல்லை துருக்கியோ சிக்கல்களை சந்திக்க போவது நிஜம், 

ஆனால் அதையும் மீறிய தெய்வம் என ஒன்று உண்டல்லவா? அந்த தெய்வம் எது நியாயமோ, எது தர்மமோ, அதை செய்யட்டும்.யாருடைய கண்ணீரும் ரத்தமும் அனுதினமும் சிந்தபடுகின்றதோ அதை நிறுத்தட்டும்

சமநேரத்திலேயே இன்னொரு பகிர்வையும் ஸ்டேன்லி ராஜன் முகநூலில் பகிர்ந்திருக்கிறார்:  

ஒருவனுக்கு தலைவிதி நன்றாக இருந்தால் அவனுக்கு சூழல் ஒத்துழைக்குமாம் இது சாணக்கியன் சொன்னது, அலெக்ஸாண்டர் வாழ்வில் இருந்து தமிழக கருணாநிதி வாழ்வு வரை இதை காணலாம் இப்பொழுது அந்த யோகம் புட்டீனுக்கு.அவருக்கு உக்ரைன் பக்கம் மிகபெரிய சிக்கல் இருந்தது, அது இன்னமும் நீடிக்கின்றது. நேட்டோ என 29 நாடுகளை தனியே எதிர்க்கின்றது ரஷ்யா இந்த 29ல் துருக்கியும் உண்டு.இந்நிலையில்தான் வாய்ப்பு பாலஸ்தீனத்தில் ரஷ்யாவுக்கு வாய்ப்பு கிடைத்தது, தன் எல்லையில் நடந்த பரபரப்பை இஸ்ரேலிய எல்லைக்கு நகர்த்திவிட்டார் புட்டீன்

ஐ.நாவில் கடும் சத்தம், அவசர மசோதா என பந்தை அப்பக்கம் தள்ளி துருக்கியினை உள்ளே இழுத்து போட்டு ஆடுகின்றது ரஷ்யா. துருக்கியின் அமைவிடம் இலங்கை போல முக்கியமானது, கருங்கடல் மத்திய தரைகடல் அசோர் கடல் என ரஷ்யாவின் அருகிருக்கும் கடல் எல்லாம் அவர்களுடைய ஏரியா.நேட்டோ என துருக்கியினை சேர்த்து ஐரோப்பா படியளக்க அதுதான் காரணம்

துருக்கி சர்வதேச அமைதிபடை அல்லது இஸ்லாமிய படை ஜெருசலேமுக்கு செல்ல வேண்டும் என சொல்வதில் ரஷ்ய கரங்களும் இல்லாமல் இல்லை.தன் காலடியில் அமெரிக்கா தீயினை பற்றவைக்க முயல, இஸ்ரேல் பக்கம் தீயினை வைத்துவிட்டு ஒன்றும் அறியாதவர் போல் அமர்ந்திருக்கின்றார் புட்டீன்

காற்று இப்பொழுது அவருக்கு சாதகம், சிரியாவில் கடுமையாக நிலைகொண்ட ரஷ்யா இஸ்ரேலுக்கு மிகபெரிய சவால்.சர்வதேச அரசியல் சதுரங்கம் சுவாரஸ்யமாகத்தான் சென்று கொண்டிருகின்றது

இரண்டும் கொஞ்சம் முரண்படுகிற மாதிரித்தான் இருக்கிறது இல்லையா? ஒருவாரமாக இதுதொடர்பாக நிறைய வாசித்துக்கொண்டிருக்கிற எனக்கே இதை எங்கிருந்து ஆரம்பிப்பது, முடிப்பது என்பதில் ஏகப்பட்ட குழப்பம்!   

ஆனால் விஷயம் சிம்பிள். நீயா நானா என அமெரிக்கா+ ஒருபுறமும் ரஷ்யா மறுபுறமுமாக இந்தப் பிரச்சினையை வைத்து FootBall ஆடிக்கொண்டு இருப்பதில் உதைபந்தாக இருப்பது நிச்சயமாக இஸ்ரேல் இல்லை. அவர்கள் விளையாட்டே தனி!

இன்னும் கொஞ்சம் விவரங்களோடு தொடர்வோம்.  

2 comments:

  1. கட்டுரை சுத்தமாக என்ன சொல்ல வருகிறார் என்பதைச் சொல்லவில்லை.

    ReplyDelete
    Replies
    1. எது? நீலக்கலரில் முகநூலில் இருந்து எடுத்துப்போட்டதைச் சொல்கிறேர்ர்களா நெல்லைத் தமிழன் சார்?

      அல்லது பதிவு முழுக்கவுமே புரியவில்லையா? Leon Uris எழுதிய Exodus நாவலைக் கல்லோரிக்கலங்களில் படித்துவிட்டு நான் புரிந்துகொள்ள அத்தனை தடுமாறி இருக்கிறேன்.மத்திய கிழக்கு விவகாரங்களே அவ்வளவு குழப்பமாகத்தான் இருக்கின்றன.

      Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை