மேற்கு ஆசியாவில் சீனா தனது பணபலத்தை வைத்து நுழைந்திருக்கிறது. பாரக் ஒபாமா அதிபராக இருந்த நாட்களில் ஈரானுடன் ஏற்படுத்திக் கொண்ட அணு ஒப்பந்தத்திலிருந்து முந்தைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியேறியதுடன் பொருளாதாரத்தடைகளையும் விதித்தார். இப்போது டெமாக்ரட்டுகள் மீண்டும் பதவிக்கு வந்திருப்பதால் ஈரானுடனான அணு ஒப்பந்தத்தில் மறுபடி நுழைய விரும்புகிறார்கள்.
அடுத்துவரும் 25 ஆண்டுகளில் 400 பில்லியன் டாலர்கள் முதலீடு என்ற கவர்ச்சிகரமான அறிவிப்புடன் ஈரானுடன் சீனா ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டிருக்கிறது. "இந்த ஒப்பந்தம் குறித்த தகவல்கள் வெளிவரவில்லை. இருப்பினும் அமெரிக்காவின் தடைகளை மீறும் வண்ணம் சீனா இரானிடமிருந்து எண்ணெய் வாங்கும் என்று ஊகிக்கப்படுகிறது.இரான் மீது விதிக்கப்பட்ட தடையால் இரான் வெளிநாட்டு முதலீடுகள் இல்லாமல் தடுமாறியது. சர்வதேச வல்லமை பெறுவதற்கான சீனாவின் 70 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளில் முதலீடு செய்யும் திட்டத்தின் ஒரு விரிவாக்கமாகவே இந்த ஒப்பந்தம் உள்ளது.
கடந்த வருடம் இந்த ஒப்பந்தத்தின் வரைவு கசிந்த பிறகு சீனாவின் எண்ணம் குறித்து இரானியர்கள் சிலர் சந்தேகித்தனர். சீனாவின் `பெல்ட் அண்ட் ரோட்` திட்டம் சீனாவுக்கே அதிகம் பயனளிக்கக்கூடியது. இதில் சில சிறிய மற்றும் ஏழை நாடுகள் ஏமாற்றம் அடைந்தன. (அதில் இடம்பெற்றுள்ள நாடுகள் பல சீனாவைக் காட்டிலும் சிறிய மற்றும் ஏழை நாடுகள் ஆகும்.) " என்று பிபிசி தனது செய்தியில் சொல்கிறது.
இதில் வேடிக்கையான அம்சம் என்னவென்றால் அதிக ஆரவாரத்துடன் ஆரம்பிக்கப்படும் சீன முதலீடுகள், திட்டம் எதுவும் இதுவரை முழுமையாக நிறைவேறியது இல்லை என்பதுதான். ஆனாலும் சீனவலையில் ஈரான் போன்ற பலநாடுகளும் வலுவில் வந்து விழுவது குறையவே இல்லை.
ஏற்கெனெவே ஈரானுடன் சபஹர் துறைமுகத்தை நவீனமயமாக்கும் ஒப்பந்தம் செத்துக்கொண்டிருக்கும் இந்தியா எதிர்நோக்கும் சவால்கள் என்ன என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கிறது.
அமெரிக்கர்களுடைய நம்பர் 1 இடத்தைப்பிடிக்கும் சீன முயற்சிகளுக்கு, அமெரிக்காவே இடம் கொடுக்கும் விசித்திரத்தைப் பார்க்கப்போகிறோமா என்ன?
மீண்டும் சந்திப்போம்.