Tuesday, June 15, 2021

இஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்னதான் சொல்கிறது?

இஸ்ரேல் ஆட்சி மாற்றம் என்ன சொல்கிறது? என்றதலைப்பில் வெ.சந்திரமோகன் இன்றைய இந்து தமிழ்திசை நாளிதழில் எழுதிய முற்றுப்பெறாத அரைகுறையான செய்திக்கட்டுரை என்னதான் சொல்ல வருகிறது? முதலில் என்ன எழுதியிருந்தது என்பதை முதலில் பார்த்துவிடலாம். இந்துதமிழ்திசைக்கு நன்றி    

இஸ்ரேலில் புதிய ஆட்சி மலர்ந்துவிட்டது. நீண்ட நாட்களாகப் பிரதமராகப் பதவி வகித்த லிகுட் கட்சித் தலைவர் பெஞ்சமி நெதன்யாஹு, எதிர்க்கட்சித் தலைவர் வரிசையில் அமரும் சூழலுக்குத் தள்ளப்பட்டு விட்டார். யமினா கட்சியின் தலைவர் நஃப்தாலி பென்னெட் புதிய பிரதமராகியிருக்கிறார். மொத்தம் 120 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளு மன்றமான ‘க்னெஸ்ஸெட்’டில் நேற்று முன்தினம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், 60-59 என நூலிழை வித்தியாசத்தில் புதிய அரசு அமைந்திருக்கிறது. ஒருவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை! 


49 வயதாகும் பென்னெட், அமெரிக்காவிலிருந்து வந்து இஸ்ரேலில் குடியேறிய யூதக் குடும்பத்தில் பிறந்தவர். பெரும் தொழிலதிபராக அறியப்பட்டவர். கோடீஸ்வரர். தீவிர வலதுசாரிச் சிந்தனை கொண்டவர். அதிதீவிர தேசியவாதி. மதப்பற்றுள்ள யூதர்கள் அணியும் ‘கிப்பா’ எனும் குல்லாவை அணிந்து பிரதமராகும் முதல் தலைவர் இவர்தான்! 2006 முதல் 2008 வரை நெதன்யாஹுவின் உதவியாளராகப் பணியாற்றியவர். நெதன்யாஹுவுடனான கருத்து வேறுபாட்டால், லிகுட் கட்சியிலிருந்து வெளியேறியவர். ஒருகட்டத்தில் ‘நியூ ரைட்’ எனும் வலதுசாரிக் கட்சியைத் தொடங்கினார். அக்கட்சியை உள்ளடக்கிய யமினா கட்சிதான் இன்றைக்கு ஆளும் கூட்டணிக்குத் தலைமை வகிக்கிறது.

ஆட்சி மாற்றம் ஏன்?

கடந்த 2019 ஏப்ரல் 9-ல் நடைபெற்ற தேர்தல் முதல், 2021 மார்ச் 23-ல் நடைபெற்ற தேர்தல் வரை கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் 4 தேர்தல்களை இஸ்ரேல் எதிர்கொண்டுவிட்டது. அதன் பின்னரும் போதிய எண்ணிக்கை இல்லாததால் ஆட்சியமைப்பதில் கட்சிகளுக்கு இடையே இழுபறி நீடித்து வந்த நிலையில் தான் வெவ்வேறு கொள்கைகள் கொண்ட கட்சிகள் இணைந்து இப்படிஒரு வானவில் கூட்டணியை ஏற்படுத்தியிருக்கின்றன. நஃப்தாலி பென்னெட் தலைமையிலான வலதுசாரிக் கட்சியான யமினா கட்சி, முன்னாள் ஊடகவியலாளரான யாயிர் லாபிட் தலைமையிலான மையவாதக் கட்சியான ‘யேஷ் ஆட்டிட்’, அரேபியர்கள் பிரதானமாக அங்கம் வகிக்கும் ‘யுனைட்டட் அரபு லிஸ்ட்’ எனும் கட்சி ஆகியவற்றுடன் மேலும் 5 கட்சிகளும் இக்கூட்டணியில் இடம் பெற்றிருக்கின்றன.


போர், ஆக்கிரமிப்பு, மனித உரிமை மீறல் எனத் தொடர்ந்து சர்ச்சையில் அடிபட்டுவரும் தேசமான இஸ்ரேல், இன்றுவரை ஒரு ஜனநாயக நாடுதான். பெரும்பான்மை கிட்டாததால் தொடர்ச்சியாக தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு அமைவதற்கான சூழல் இஸ்ரேலில் நிலவவே செய்கிறது. விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில்தான் இங்கு தேர்தல் நடத்தப்படுகிறது. ஸ்திரத்தன்மையற்ற அரசு தொடரக் கூடாது; மீண்டும் தேர்தல் கூடாது எனும் அடிப்படையில், மாறுபட்ட கொள்கைகள் கொண்ட இந்த 8 கட்சிகளும் இணைந்திருக்கின்றன.

27 அமைச்சர்கள்

21 சதவீதம் அரேபியர்கள் வசிக்கும் இஸ்ரேலில் ஓர் அரபுக் கட்சி, ஆளும் கூட்டணியில் பங்கேற்பது இதுவே முதல்முறை. ‘யுனைட்டட் அரபு லிஸ்ட்’ கட்சியின் தலைவரான மன்சோர் அப்பாஸ், அமைச்சரவையில் இடம்பிடிப்பார் என்று முன்பே எதிர்பார்ப்பு இருந்தது. அது இப்போது பூர்த்தியாகியிருக்கிறது. மொத்தம் 27 அமைச்சர்களில் 9 பேர் பெண்கள். கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான நிபந்தனையின்படி, தற்போது வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் யாயிர் லாபிட், 2 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமராகப் பதவி வகிப்பார். அவரது யேஷ் ஆட்டிட் கட்சியைச் சேர்ந்த மிக்கி லெவி நாடாளுமன்ற சபாநாயகராகியிருக்கிறார்.

வாக்கெடுப்பு முடிந்ததும் பென்னெட்டுக்குக் கைகுலுக்கி வாழ்த்துச் சொல்லிவிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையில் சற்று நேரம் அமர்ந்துவிட்டுச் சென்றிருக்கிறார் நெதன்யாஹு. எனினும், இந்தக் கூட்டணியை ஏற்றுக்கொள்ள அவருக்குச் சுத்தமாக இஷ்டம் இல்லை. “ஆபத்தான இந்த அரசைக் கவிழ்த்துவிட்டு மீண்டும் ஆட்சிக்கு வருவோம்” என நாடாளுமன்றத்திலேயே சூளுரைத்திருக்கிறார்.

மொத்தம் 15 ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்திருக்கும் நெதன்யாஹு, 12 ஆண்டுகள் தொடர்ச்சியாக அந்தப் பதவியில் அமர்ந்திருந்தவர். எனவே, பதவி சுகத்தை விட்டுக்கொடுக்க மாட்டார் என்றே கருதப்படுகிறது. கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகள் தங்கள்கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டால்தான், புதிய அரசு தனது பதவிக் காலத்தை நிறைவுசெய்ய முடியும். கூட்டணியில் சிறு உரசல் என்றாலும் அதைப் பெரிதாக்கி ஆட்சியைக் கலைத்துவிடுவார் நெதன்யாஹு. நாடாளுமன்றத்தில் பென்னெட் உரையாற்றும்போது நெதன்யாஹுவின் ஆதரவாளர்கள், “பென்னெட் ஒருகுற்றவாளி, பொய்யர்” என்று கூச்சல் போட்டுக்கொண்டே இருந்ததைப் பார்க்கும்போது நிலவரம் அவ்வளவு சிலாக்கியம் இல்லை என்பது புரிந்தது. 

ஊழல் புகார்களை எதிர்கொண்டிருக்கும் நெதன்யாஹு கட்சித் தலைமைப் பதவியில் தொடர்வது சவாலாகி இருக்கிறது. எனினும், எதிலும் எளிதில் விட்டுக் கொடுக்காத தன்மை கொண்ட நெதன்யாஹு தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்றம் சாத்தியமா?

பாலஸ்தீனத்துடனான பதற்றத்தைக் குறைப்பதும் அமெரிக்காவுடன் நல்லுறவைப் பேணுவதும்தான் புதிய அரசின் முக்கியக் குறிக்கோள்கள் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. எனினும், பாலஸ்தீனர்களைப் பொறுத்த வரை இந்தக் கூட்டணி அரசு நன்மை எதையும் செய்யப் போவதில்லை எனும் எண்ணம்தான் இருக்கிறது.

காரணம், புதிய பிரதமர் பென்னெட் தீவிர தேசியவாதி. பாலஸ்தீனத்துக்கு எதிரான கொள்கை கொண்டவர். பாலஸ்தீனப் போராளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று பேசுபவர். ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தையும் எதிர்ப்பவர். ஆக, நெதன்யாஹு ஆட்சிக்கு நேர் எதிரான ஆட்சி இஸ்ரேலில் அமைந்துவிடவில்லை. எனவே, அந்நாட்டின் ஒட்டு மொத்த அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை!

இஸ்ரேல் புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், ‘‘இஸ்ரேல் பிரதமராக பதவியேற்றுள்ள நஃப்தாலி பென்னட்டுக்கு வாழ்த்துகள். இந்தியா, இஸ்ரேல் இடையே தூதரக உறவுகள் மேம்படுத்தப்பட்டு அடுத்த ஆண்டுடன் 30 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்த தருணத்தில், நான் தங்களைச் சந்திக்கவும், இருதரப்பு உறவை வலுப்படுத்தவும் ஆர்வமாக உள்ளேன்’’ என கூறி உள்ளார். மேலும், முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுக்கும் மோடி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் யாயிர் லாபிட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு நன்றி தெரிவித்துள்ள யாயிர் லாபிட் தனது ட்விட்டர் பதிவில், ’இந்தியா - இஸ்ரேல் இடையே நட்புறவை மேம்படுத்த இஸ்ரேலின் புதிய அரசு ஒத்துழைக்கும்’ என்று கூறியுள்ளார்.

கடைசி இரண்டு பாராக்களை விடுங்கள். சந்திரமோகன் செய்திகளைத்தொகுத்து என்ன சொல்லவருகிறார்?

தடித்த எழுத்தில் இருக்கும் பகுதிகளே அவரது தொகுப்பு முற்றுப்பெறாமலும் அரைகுறையாகவும் இருப்பதைச் சொல்லும். அதேநேரம் பிரச்சினைகள் என்னென்ன என்பதையும் கூட.

இஸ்ரேலில் தற்போது நடந்திருக்கும் ஆட்சிமாற்றம் மக்களுடைய விருப்பத்தில் நடந்த ஒன்றல்ல. நாடாளு மன்ற  வாக்கெடுப்பிலும் கூட பாதிக்குப்பாதி என்று தான் இருந்திருக்கிறது. விகிதாச்சார பிரதிநிதித்துவம் Proportionate Representation என்கிற தேர்தல் முறையில் நம்மூரில் இருப்பதுபோல ஒரே ஒரு ஓட்டில் ஜெயித்தாலும் எதிர்த்துவிழுந்த வாக்குகளையும் அள்ளிக்கொண்டு போகிற மாதிரி இல்லாமல் வாங்கிய ஓட்டுகளுக்குத் தகுந்த விகிதத்தில் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிற முறை. இதனால் தான் கடந்த 2 ஆண்டுகளில் 4 முறை பொதுத்தேர்தல் நடந்தும்கூட எந்த ஒருகட்சியோ, கூட்டணியோ பெரும்பான்மை பெற முடியாத சிக்கல்.

இப்போது எப்படித் தீர்ந்திருக்கிறது? அரபிகளுடைய கட்சியைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டதால்தான் என்று சொல்லும்போதே கட்டுச்சோற்றுக்குள் பெருச்சாளியையும் சேர்த்துக் கட்டிய கதையாக, இந்தக் கூட்டணி நீண்டகாலம் நிலைக்காது என்பதையும் சொல்லி விடுகிறது.

மீண்டும் சந்திப்போம்.              

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை