அனேகமாக டொனால்ட் ட்ரம்ப் அளவுக்கு உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலும் சரி எல்லோரையும் கதற விட்டவர்கள் உலகத்தலைவர்களில் வேறு எவருமில்லை என்றே சொல்கிற அளவுக்கு வாய் என்றால் அப்படி ஒரு வாய்! வாய்தான் அப்படி என்றால், ராஜீய உறவுகளில் இப்படித்தான் என்று கணிக்க முடியாதபடி அப்படி ஒரு முரண். 2020 இல் பதவிக்காலம் முடிகிற வரை சகித்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முன்பு ஈரானுக்கு அறிவுரை சொன்னதுண்டு. சீனாவும் கூட, ட்ரம்ப் பதவிக் காலம் முடிகிற வரை முட்டல் மோதல்களை வளர்த்துக் கொள்ளாமலும், அதே நேரம் ரஷ்யா உள்ளிட்ட எல்லா நாடுகளுடன் ஒரு சுமுகமான உறவை வளர்த்துக் கொள்வதிலும் அதிக அக்கறை காட்டுவதில் அர்த்தம் இல்லாமல் இல்லை,
அமெரிக்காவோடு அதிகம் ஒட்டி இழைந்துகொண்டிருக்கும் ஒரே நாடு என்றால் அது பிரிட்டன் தான்! கடந்த புதனன்று USA வுக்கான பிரிட்டிஷ் தூதர் சர் கிம் டர்ரக் ராஜினாமா செய்து இருப்பது இப்போது சர்வதேச அளவில் வெளியுறவு விவகாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படும் செய்தி! என்ன நடந்ததாம்? போன ஞாயிற்றுக் கிழமை, பிரிட்டிஷ் தூதர் தனது அரசுக்கு அனுப்பிய தகவல்கள் (பிரிட்டிஷார் இதை தந்தி / telegram என்கிறார்கள் அமெரிக்காவில் இதையே Cable என்று சொன்னாலும் இன்றைய சூழலில் இவை நமக்குப் பரிச்சயமான மின்னஞ்சல்கள் தான்) வெளியே கசியவிடப்பட்டதில், டர்ரக் அமெரிக்க அதிபரைப்பற்றிய தன்னுடைய அனுமானங்களைச் சொல்லியிருந்தது, இப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது
மேலே இருக்கும் ட்வீட்டர் செய்திகளைக் கொஞ்சம் பாருங்கள். டொனால்ட் ட்ரம்ப் என்கிற மேதாவி எப்படி உலக நடப்பை விமரிசிக்கிறார், பதிலுக்கு விமரிசிக்கப்படுகிறார் என்பதை மிகத் தெளிவாகவே புரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்த ரகசியத் தகவல்களைக் கசிய விட்டது, பிரிடிஷ் பிரதமராகக் காத்திருக்கும் போரிஸ் ஜான்சன் தான் என்றும் சொல்கிறார்கள்.
சரி, இப்போது இந்தக் கதையெல்லாம் இப்போது எதற்கு? நமக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி இயல்பாகவே எழலாம். ஒரு நாட்டைப் பிடித்த ஏழரை, அதோடு மட்டும் முடிவதில்லை. இன்றைய உலகமானது வெறுமனே பொருளாதாரம், ராணுவ சமபலம் தூதரக உறவுகள் இவைகளால் மட்டுமல்ல, பொறுப்புள்ள அரசியல்வாதிகள் நாடாளத் தேர்ந்தெடுக்கப் படுவதிலும் சேர்ந்தே இருக்கிறது. ஒரு தவறான நபர் தகுதியில்லாத பொறுப்புக்கு வரும்போது, தன்னுடைய நாட்டை மட்டுமல்ல, உலக அமைதிக்குமே கூட ஊறு விளைவிக்கிறார். இந்தமாதிரி நபர்களால் ஏற்படும் சேதங்களை சரிசெய்ய எத்தனை தலைமுறைகள் தேவைப்படும் என்பதை யாரால் சொல்ல முடியும்?