Thursday, July 2, 2020

இந்தியா பாகிஸ்தான் சீனா! திரண்டு வரும் போர்மேகங்கள்!

இந்தப்பக்கங்களில் சீனா எழுபது என்று சென்ற வருட அக்டோபர் மாதத்தில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சி, சீனத்தை ஆள ஆரம்பித்த எழுபதாவது ஆண்டுக் கொண்டாட்டங்களைப் பற்றி எழுதிய பதிவுகளில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும், சீன அதிபருமான ஷி ஜின்பிங் தனது கனவுத்திட்டத்தை முன்வைத்துப் பேசியதை கொஞ்சம் பார்த்திருக்கிறோம். 2049 ஆம் ஆண்டுக்குள் சீனாவை உலகின் வலிமையான பொருளாதாரமாகவும், சக்தியாகவும் உருவாக்குவதற்கு சபதம் எடுத்துக் கொண்ட மாதிரி மேலோட்டமாக இருந்தாலும், ஷி ஜின்பிங்  தன்னுடைய ஆயுள் காலத்திலேயே சீனாவை உலகின் நட்ட நடுநாயகமாக (Tianxia) ஆக்க முயற்சிக்கிறாரா அல்லது உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சரிந்து கொண்டிருக்கிற தனது இமேஜைக் காப்பாற்றிக் கொள்ள தடாலடி நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறாரா? சீனாவின் அண்மைக்கால நடவடிக்கைகளில்  இப்படி சந்தேகம் எழுந்திருப்பதென்னவோ நிஜம்! 


The Print  தளத்தில் சேகர் குப்தா சீனாவைக் குறித்து  உலகநாடுகளிடம் அதிகரித்துவரும் எச்சரிக்கை உணர்வு குறித்து சில முக்கியமான விஷயங்களை இந்த 25 நிமிட வீடியோவில் சொல்கிறார். சீனாவுடன் நெருக்கம் காட்டுவதற்காக, தங்களுடைய நீண்ட காலக் கூட்டாளியான அமெரிக்காவை உதறிய ஆஸ்திரேலியா, பிரிட்டன் இவைகளுடன் நியூசிலாந்து, கனடாவும் சேர்ந்து சீனாவைக் குறித்தான தங்களுடைய கொள்கை அணுகுமுறையில் தலைகீழ் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன. இந்த நாடுகள் மறுபடியும் அமெரிக்க நிலையை ஆதரிக்க ஆரம்பித்திருப்பதற்கு, ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு காரணம் இருந்தாலும், ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய சீனாவுடன் நெருக்கம் என்கிற நிலைமை இப்போது இல்லை என்பதில் சீனாவுடைய பேராசையுடன் கூடிய ஆதிக்க விஸ்தரிப்புக் கனவுகள் தான் என்பது மிக முக்கியமான காரணம். சீனாவுடன் நெருக்கம் காட்டியதற்காக இப்போது மிகவும் வருத்தப் படுவது ஆஸ்திரேலியா தான்! தனது பாதுகாப்பு பட்ஜெட்டை 40% அதிகரித்து, தனது வருத்தத்துக்குப் பரிகாரம் தேட ஒரு ஆரம்பத்தைத் தொடங்கி வைத்து இருக்கிறது.

பிரிட்டனுக்கு வேறுவிதமான பிரச்சினை! ஹாங்காங் கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்குச்  சீனா, கடுமையான சட்டத்தை சிலநாட்களுக்கு முன் அமல் படுத்தியதில், விரும்புகிற ஹாங்காங் குடிமக்களுக்கு பிரிட்டிஷ் குடியுரிமை வழங்க முன்வந்திருக்கிறது. ஆங்கிலம் பேசும் நாடுகள்தான் இப்படி என்றில்லாமல் 
இத்தனைகாலம் பின்னுக்குத் தள்ளி வைக்கப்பட்டு இருந்த தைவான் விஷயமும் கூட இப்போது முன்னுக்கு வர ஆரம்பித்திருக்கிறது என்பதில் சீனத்துப்பூனைக்கு மணிகட்ட  உலகநாடுகள்  பலவும் ஒன்று சேர ஆரம்பித்திருக்கின்றன.

ஆனால் சீனத்துச் சண்டியர் தன்னுடைய உதார்களைக் கொஞ்சமும் குறைத்துக் கொள்ளவில்லை. இந்திய எல்லையில் தனது படைகளைக் குவித்து வருவதோடு, பாகிஸ்தான், நேபாளம் இவைகளையும் இந்தியாவுக்கு எதிராகக் கொம்புசீவிவிட்டுக் கொண்டிருக்கிறது. இந்தத் துண்டு துக்காணிகளோடு, வங்காளதேசம், இலங்கை நாடுகளும் சீனாவுடன் கைகோர்க்கலாம். இன்னமும் இவ்விரு நாடுகளுடைய நிலைபாடும் தெளிவாகத் தெரியவில்லை.

ஒரு முழு அளவிலான யுத்தம் இந்தியா சீனாவுக்கிடையே வருமா என்பது சந்தேகமே. ஆனால் முட்டலும் உரசலும் இன்னும் நீண்டநாட்களுக்கு நீடிக்கும். ஒப்பீட்டளவில் சீனாவுடைய ராணுவபலம் இந்தியாவை விட அதிகம் தான் என்றாலும், தன்னுடைய முழுபலத்தையும் காட்டுகிற நிலையில் சீனா இல்லை. முன்னர் 1962 இல் இந்தியாவுக்கு இருந்த பலவீனமான அரசியல் தலைமை மாதிரி  இப்போது இல்லை என்பதோடு இந்திய ராணுவம் இப்போது முழுமையாகத் தயார் நிலையில் இருக்கிறது.

துப்பாக்கி, பீரங்கிகளை விட சீனாவை உயிர்போகிற மாதிரி வலிக்கிற இடமாகப் பொருளாதாரரீதியிலான அடியை இந்தியா கொடுத்திருக்கிறது. டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளை இந்தியா தடை செய்திருப்பதில், டிக்டாக் நிறுவனம் ஒன்றுக்கு மட்டுமே 45000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படலாம் என்கிறார்கள். Huawei  நிறுவனத்துக்கான தடையை அமெரிக்கா மட்டுமே இதுநாள்வரை வலியுறுத்தி வந்தது. இப்போது வேறுபல நாடுகளும் சீனத்தயாரிப்புகளுக்குத் தடை விதிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.  
 
பாகிஸ்தானியர்கள் பாடு திண்டாட்டம்தான்! சீனாவுடன் சேர்ந்து கும்மியடிக்கலாம் என்கிற கனவும் கூட நீண்ட  நாட்களுக்கு நிலைக்காது என்கிறமாதிரித்தான் நிலவரம் இருக்கிறது. நேபாளத்துக் கம்யூனிஸ்ட் அரசின் நிலைமைகூட பரிதாபம்தான்! அண்ணன் மகிந்த மாதிரி கோத்தபய ராஜபட்சே சீன ஆதரவு நிலை எடுப்பாரா என்பது கூட 9 ரூபாய் நோட்டு மாதிரியான கேள்விதான்!  

மீண்டும் சந்திப்போம்.   
         

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை